புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக்கொள்கையில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதுவையில் கடந்த 27-ந் தேதி அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருக்கும் பட்சத்தில் முந்தைய வேலை நாளை புத்தக பையில்லா தினமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அரசின் கல்வித்துறை உத்தரவில் தனியார் பள்ளிகளும் புத்தகப் பையில்லா தினத்தை கடைபிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளியில் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர். சில தனியார் பள்ளிகளில் இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *