புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.
இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டதாக சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு புகார் வந்தது.டி.ஜி.பி உத்தரவின் பேரில் எஸ்.பி மோகன்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்த னர். இதில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனைகளாக பிரித்து விற்றது தெரிந்தது. இந்த மனைகளில் சிலவற்றை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாங்கியதாகவும் புகார் எழுந்தது. சி.பி.சி.ஐ.டி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி சார்பதி வாளர் சிவசாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உட்பட 17 பேரை கைது செய்தனர். நிலம் பத்திரப் பதிவு தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கோவில் நிலத்தை மனைப் பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். மனை வாங்கியுள்ள அனைவரின் கிரய பத்திரத்தையும் ரத்து செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தர விட்டார். இந்த பணிகளை 6 வாரத்திற்குள் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். இதையடுத்து விற்பனை பத்திரம் ரத்து செய்யபட்டது.
கோயில் நிலத்தை மீண்டும் காமாட்சியம்மன் கோயில் நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று வானவில் நகரில் நடந்தது.
மாவட்ட பதிவாளர் கந்தசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் கோவில் நிர்வாகி களிடம் நில ஆவணம், ஐகோர்ட்டு உத்தரவு ஆகிய வற்றை ஒப்படைத்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாகிகள் அதிகாரிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *