நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமார், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது ஷபீர் ஆலம் மற்றும் வேளாண்துறை இணை இயக்குனரகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 1,096 குளங்கள் உள்ளது. இதில் 730 குளங்கள் வறட்சியாக காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் சேர்த்து 39.9 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெரும்படையார் பேசும் போது, போதிய அளவு நீர் இல்லாததால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்வாய் நீர்வரத்தும் இந்த ஆண்டு இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குறைவாக தண்ணீர் உள்ள பகுதிகளில் பயிர் நன்றாக வளராமல் திரட்சியாக காணப்படுகிறது.
விவசாயிகள் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே பயிரிட்டுள்ளனர். எனவே நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய கலெக்டர் விஷ்ணு வறட்சி மாவட்டமாக அறிவிக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இதுகுறித்து ஆய்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ராதாபுரம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசுகையில், ராதாபுரம் அருகே உள்ள இருக்கன் துறை என்ற ஒரே கிராமத்தில் 28 கல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தில் இத்தனை கல்குவாரிகள் அமைக்க அரசு எப்படி அனுமதி வழங்கியது என்று தெரியவில்லை

விதிமுறைகளை மீறி இந்த குவாரிகள் செயல்பட்டு வருகிறது. வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் வீடுகள் இடிந்து விழும் நிலை காணப்படுகிறது.விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் குவாரிகள் செயல்படுவதால் அந்த கிராமமே மண்ணில் புதையும் நிலை உள்ளது.
கல் ஏற்றி அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே இருக்கன்துறை கிராமத்திற்கு நேரில் வந்து கல் குவாரிகளை ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரிகளை மூட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் விஷ்ணு விரைவில் சப்-கலெக்டர் மூலம் இருக்கன்துறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *