பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு நகரங்களி லிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஊர்களுக்கு திரும்பினர். இதனால் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. பஸ் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பஸ்களில் பயணிப்ப
வர்களுக்கு டிக்கெட் வழங்கப் பட்டது. அதிகாரிகள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை கண்காணித்தனர்.

இதேபோல் மதுரையில் இருந்தும், மதுரை வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மதுரை ரயில் நிலையத்திலும் பயணிகள் அதிகம் இருந்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகளை வரிசையில் நிறுத்தி போலீசார் ஏற்றிவிட்டனர்.


ஆம்னி பஸ்களில் சென்னைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,000 வரையும், பண்டிகை நாட்களில் ரூ.2,000 வரையும் வசூலிக்கப்படுவது வழக்கம். நேற்று வழக்கத்தை விட கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கோவைக்குச் செல்லும் பஸ்கள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கோவைக்கு அரசு பஸ்ஸில் ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி தனியார் வேன்கள் ரூ.500 கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் சென்றனர். விதிமுறைப்படி வேன்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. இருப்பினும் ஆரப்பாளையத்திலிருந்து தனியார் வேன்களில் இரவு முழுவதும் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *