இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை, மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரி இன்குபேஷன் சென்டரைப் பெருமையுடன் திறந்து வைத்தபோது, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. 'பி' பிளாக்கின் நான்காம் தளத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, பூஞ்சையியல் மற்றும் நிலையான வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை வளர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறித்தது. மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரியின் இயக்குநர் மற்றும் மூத்த நுண்ணுயிரியலாளரான செல்வி ரெஃபானா ஷாஹுல் அவர்களால் நிறுவப்பட்ட இந்த இன்குபேஷன் சென்டர், நிலையான வேளாண் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தி, கார்டிசெப்ஸ் சாகுபடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அதிநவீன மையமாகச் செயல்படுகிறது.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் செயலாளர் திருமதி டி.ஆர்.கே. சரஸ்வதி, மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. பொன்னுசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருமதி டி.ஆர்.கே. சரஸ்வதி, கல்லூரி செயலாளர்
கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே புத்தாக்கத்தையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் தங்களின் தலைமைப்பங்கை அளிக்கவேண்டும் என்றார். தொடர்ந்து டாக்டர் அ. பொன்னுசாமி, அறிவியல் சமூகத்திற்கு வலுவூட்டுவதிலும் எதிர்கால தொழில் முனைவோரை வளர்ப்பதிலும் இத்தகைய முயற்சிகளின் பங்கு அவசியம் என்பது குறித்துப் பேசினார். செல்வி ரெஃபானா ஷாஹுல், கார்டிசெப்ஸ் சாகுபடியை ஒரு சாத்தியமான வணிக மாதிரியாகவும், ஒரு நிலையான விவசாய முறையாகவும் கருதி, அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவம் குறித்த மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரி பிரைவேட் லிமிடெட், பூஞ்சையியல் துறையில் தனது வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு ஆதரவளிக்க அரசாங்க நிதியுதவியைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், உயிரித் தொழில் நுட்பத் தொடக்க மானிய (BIG) திட்டத்தின் கீழ் உயிரித்தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC) உட்பட பல மதிப்புமிக்க அரசாங்கத் திட்டங்களிலிருந்து வெற்றிகரமாக நிதியுதவியைப் பெற்றுள்ளது. மேலும், புது தில்லியில் உள்ள வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் RKVY பிரிவிலிருந்து AOP-COHORT III மானியத்தையும் மைக்கோப்ளூம்ஸ் பெற்றுள்ளது. இது, வேளாண் தீர்வுகளை மேம்படுத்துவதில் அதன் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. வேளாண் வணிக அடைகாப்புச் சங்கம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) மற்றும் கலிங்கா தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப வணிக அடைகாப்பகங்கள் போன்ற நிறுவனங்களுடனான தனது இணைப்புகள் மூலம், மைக்கோப்ளூம்ஸ் இத்துறையில் புத்தாக்கத்தை ஊக்குவித்து, குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் விதை நிதி 5.0 (TANSEED) மற்றும் இந்திய அரசின் வேளாண் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் திட்டம் (AOP) போன்ற திட்டங்களில் இது பெற்றுள்ள அங்கீகாரம், வேளாண் துறையில் நிலையான நடைமுறைகளையும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும் அதன் தலைமைப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரியின் தயாரிப்புகள், குறிப்பாக கார்டிசெப்ஸ் சாகுபடியிலிருந்து பெறப்படுபவை, பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. புற்றுநோயைத் தடுப்பதற்கு உதவுதல், பாலியல் குறைபாடுகளிலிருந்து நிவாரணம் அளித்தல், ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், சுவாசக் கோளாறு மற்றும் பலவீனத்தைத் தடுத்தல், சருமத்தைப் புத்துணர்ச்சியூட்டுதல் மற்றும் வயதுப் புள்ளிகளைக் குறைத்தல், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியிலிருந்து நிவாரணம் அளித்தல் ஆகியவை இதில் அடங்கும். கார்டிசெப்ஸ், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், இதயத் துடிப்பு ஒழுங்கின்மை மற்றும் இதயக் கோளாறுகளைத் தடுப்பதற்கும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நன்மை பயக்கிறது, அதே நேரத்தில் உடலை நச்சு நீக்கம் செய்யவும் உதவுகிறது. நுண்ணுயிரியல் துறையுடனான ஒரு கூட்டுப் பங்களிப்பின் மூலம், மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரி, பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கவும், அதிநவீன உயிரித் தொழில்நுட்ப நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆய்வகச் சூழலில் குங்குமப்பூ சாகுபடி மேம்பாட்டில் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்த மையம், தொழில்முனைவோர் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு வலுவூட்டுவதையும், மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கியப் பொருட்களில் அதன் பயன்பாடுகளுக்காக அறியப்பட்ட மிகவும் மதிப்புமிக்க பூஞ்சையான கார்டிசெப்ஸ் வளர்ப்பின் நன்மைகளை ஆராய்வதற்கான ஒரு தளத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நேரடிப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம், உள்ளூர் தொழில்முனைவோர்கள் தாங்களாகவே சொந்தமாக காளான் தொழில்களைத் தொடங்கி விரிவுபடுத்துவதற்குத் தேவையான திறன்களை இந்த மையம் வழங்கும். மேலும், இது நுண்ணுயிரியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி மற்றும் திட்டப்பணி வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.