பெரம்பலூர்.ஜன.20. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் 09.01.2026 அன்று தொடங்கி வைத்தார்கள்.

“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன்மாதிரி முயற்சியாகும்.

இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டத்தில் உள்ள 61 நியாய விலைக்கடைகளில் 45,518 குடும்ப அட்டைதாரர்களும், குன்னம் வட்டத்தில் உள்ள 83 நியாய விலைக்கடைகளில் 51,267 குடும்ப அட்டைதாரர்களும், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள 58 நியாய விலைக்கடைகளில் 37,408 குடும்ப அட்டைதாரர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள 80 நியாய விலைக்கடைகளில் 50,272 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 நியாய விலைக்கடைகளில் 1,84,465 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு படிவங்கள் விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ள பெரம்பலூர் வட்டத்தில் 101 தன்னார்வலர்களும், குன்னம் வட்டத்தில் 135 தன்னார்வலர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 96 தன்னார்வலர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 122 தன்னார்வலர்களும் என மொத்தம் 454 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அந்த வகையில் பெரம்பலூர் வட்டத்தில் 36,414 குடும்ப அட்டைதாரர்களுக்கும், குன்னம் வட்டத்தில் 41,014 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 29,926 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 40,218 குடும்ப அட்டைதாரர்களுக்கும், என மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,47,572 குடும்ப அட்டைதாரர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் வட்டத்தில் 1,491 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும், குன்னம் வட்டத்தில் 1,238 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும், ஆலத்தூர் வட்டத்தில் 917 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 1,470 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும் என மொத்தம் 5,116 படிவங்கள் தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை ஊராட்சியில் இந்த பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் படிவம் பெறப்பட்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, சரியாக 31.01.2026 க்குள் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வேப்பந்தட்டை வட்டாட்சியர் சின்னதுரை உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *