தமிழ்நாட்டில் உள்ள அத்தனை துறைகளுக்கும் மனித வளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை தான் – திருவாரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஐந்தினிய விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் பேசும்போது…. மத யானையாக இருந்தாலும் மத வெறியர்களாக இருந்தாலும் அதை அடக்குகின்ற சமூக நீதி என்ற அங்குசம் திராவிட மாடல நாயகன் தளபதி கையில் தான் இருக்கிறது.
எந்த மதம் பிடித்தவராக இருந்தாலும் சரி, அவர்களை அடக்குகின்ற சமூக நீதி அங்குசத்தை வைத்துள்ள திராவிட மாடல் அரசின் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வலு சேர்க்கும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது… ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பது திமுக அரசு தான். போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் காது கொடுத்து அவர்களது கோரிக்கையை கேட்க வேண்டும்.
அவர்கள் சொல்லும் விஷயங்களில் பத்தில் மூன்றையாவது செயல்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் ஒருவன் தான் மகேஷ் பொய்யாமொழி. பள்ளி கல்வித்துறைக்கு செலவு செய்யவில்லை, முதலீடு தான் செய்கின்றோம் என தலைவர் கூறியது போல் முதலீடு, வட்டியுடன் அறிவு சார்ந்த சமுதாயம் மலரும் என எண்ணித்தான் செலவு செய்யப்படுகிறது.
ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்த்து புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது என தெரிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எரிச்சல் அடைந்து போய் உள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தான் இந்த ஓய்வூதிய திட்டத்தினை பாராட்டி பேசுகின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
என்ன செய்வது எரிச்சலாக தான் இருக்கும். விமர்சனம் மட்டும்தான் அவரால் செய்ய முடியும் வேறு ஒன்றும் முடியாது. அனைத்து துறைகளுக்கும் ஹியூமன் ரிசோர்ஸ் அதாவது மனித வளத்தை தருவது நமது பள்ளிக்கல்வித்துறை தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என பெருமிதத்துடன் பேசினார்.