காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இத்திருக்கோயில் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச உற்சவம் விமரிசையாக நடைபெறும். இத்திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணி, கும்பாபிஷேகம் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து வழக்கமான உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று தைப்பூச உற்சவம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
4 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் நீண்ட வரிசையில் நின்று அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
இந்த தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதி மற்றும் திருக்கோயில் வளாகம் முழுதும் பழங்கள் மற்றும் மலர் மாலைகளால் விமரிசையாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தைப்பூச உற்சவ ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், உற்சவதாரர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.