மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் வனவிலங்குகளால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதால் தமிழக அரசுக்கு ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வனத்துக்கு வெளியே வரும் யானை, காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகளை சுட்டு விரட்ட வேண்டும். விவசாயத்திற்கு சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும், தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அதிகப்படியான எண்ணிக்கையில் பெருகி வரும் மான்களை அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல் வருடத்திற்கு ஒரு மாதம் வேட்டையாட அனுமதிக்க வேண்டும். மயில், குரங்குகளுக்கு சரணாலயம் அமைத்து அங்கு மட்டும் வனவிலங்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். செந்நாய், முயல் போன்ற விவசாயத்தை அழிக்கும் அனைத்து வனவிலங்குகளுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காண வேண்டும் என ஆறு விதமான கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை ஒலிக்கும் நடவடிக்கையில் முன் நின்ற விவசாயிகளுக்கு பாராட்டு விழாவும், விவசாய தொழிலுக்கு சேவை செய்த தியாகத் தலைவர்கள் நாராயணசாமி நாயுடு,மற்றும் டாக்டர் சிவசாமி ஆகியோர் நினைவாக விவசாய காவலர் விருது விவசாயிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது . மாநாட்டிற்கு மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாநில பொருளாளர் சுபாஷ் உட்பட தமிழக முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தினர்