கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் துவங்கியதை யடுத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டருக்கு முந்தைய தினம் வரை 40 நாட்கள் தவக் காலம் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை தவிர்த்து விடுவர். மேலும் வீடுகளில் சுப நிகழ்வுகளையும் தவிர்ப்பர். நேற்று தவக்காலம் தொடங்கியதை யொட்டி மதுரையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜோசப் சிறப்பு திருப்பலி நடத்தி, சபை மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார்.
சிஎஸ்ஐ சபைகளில் அதிகாலை பிரார்த்தனை நடைபெற்றது. இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் வெள்ளிக்கிழமைதோறும், கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், சிஎஸ்ஐ ஆலயங்களில் லித்தானியா பிரார்த்தனை நடைபெறும் ஏப்ரல் 3-ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி, ஏப்ரல் 5-ம் தேதி இயேசு
உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையுடன் தவக் காலம் நிறைவு பெறுகிறது.