எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அப்துல் கலாமின் கனவு பாஜக–என்.ஆர் காங்கிரஸ் சிதைக்கிறது திமுக குற்றசாட்டு. இது குறித்து புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா விடுத்துள்ள அறிக்கையைில் கூறியிருப்பதாவது;
புதுச்சேரி மாநிலம் கல்வியில் உயர்ந்து நிற்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி முடித்து வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
வௌி மாநிலங்களுக்கு வேலைதேடி இளைஞர்களும், பெண்களும் படையெடுக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஞாயிறுதோறும் நம்முடைய புதுச்சேரி பேருந்து நிலையம் தமிழ்நாட்டுக்கு பயணப்படும் மாணவர்களின் கூட்டம் இதற்கு சாட்சியாக உள்ளது.
கூட்டணி சேர்ந்து மக்களை ஆசைக்காட்டி புதுச்சேரியில் ஆட்சி அமைத்திருக்கின்ற பாஜக பெஸ்ட் புதுச்சேரி என்றும் என்.ஆர் காங்கிரஸ் புதுச்சேரியை மீட்போம், காப்போம் என்றும் வெற்றுக் கூக்குரலை முன்வைத்ததை புதுச்சேரி மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக இந்த இரண்டாண்டு ஆட்சியில் அவர்கள் சாதித்தது வெறும் ஆசை வார்த்தைகள் தான்.
என்.ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 9 ஆயிரத்து 400 அரசுப் பணியிடங்களை நிரப்புவோம், தகவல் தொழில்நுட்ப பெரு வணிக நிறுவனங்கள்(IT PARK) மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், ஒன்றிய அரசு அறிவித்த 7 ஜவுளிப் பூங்காவில் ஒரு பூங்கா புதுச்சேரியில் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், சேதுராப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலைகள் நிறுவி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று சொன்னார்கள்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில், இரண்டரை லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம், ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுக்குள் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், புதிய தொழில் மற்றும் முதலீட்டுக் கொள்கையை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்குவோம், புதிய முதலீட்டு வாரியம் உருவாக்கி சிறு, குறு தொழில் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவோம் என்றும் சொன்னார்கள். ஆனால் சொன்னது ஏதும் இதுவரை செய்யவில்லை.
ஆட்சி அமைந்த பிறகும் சட்டமன்றத்திலும், செய்தியாளர்கள் மத்தியிலும் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் 10 ஆயிரம் நிரப்பப்படும் என்று ஆசைக்காட்டினர். ஆனால் நடந்தது என்ன?.
முந்தைய திமுக–காங்கிரஸ் அரசு வயது வரம்பை தளர்த்தி 350 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு செய்து அதற்கான பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசு அதற்கும் ஓராண்டுகள் எடுத்துக் கொண்டு அந்த பணியை நிரப்பியது. இது மட்டும்தான் இன்றைய ஆட்சியாளர்கள் ஆற்றிய சாதனை. இதில் எங்களுக்கும் பங்கு உண்டு.
எல்டிசி (165), யுடிசி (116), ஸ்டோர் கீப்பர் (55) ஆக மொத்தம் 336 பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு செய்து முடங்கிக் கிடக்கிறது.
10 ஆயிரம் பணியிடங்களில் அறிவிப்பு செய்த 336 தவிர்த்து மீதிப் பணியிடங்களை எப்போது நிரப்பப் போகிறார்கள்?.
இவர்களைப் போலத்தான் ஒன்றிய பாஜக அரசு 2014 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று ஆசைக்காட்டி ஆட்சியில் அமர்ந்தனர். வேலை என்னவாயிற்று என்று கேட்டபொழுது பக்கோடா விற்பதும் வேலைதானே என்று ஏலனப் போக்கு காட்டினார்கள். தேர்தல் நெருங்குவதால் 10 லட்சம் பேருக்கு வேலை என்று மீண்டும் ஆசைக்காட்டி சாதாரணமான (Regular Postings) பணியிடங்களை தாங்கள் தான் செய்வதாக அங்கொன்றும், இங்கொன்றும் வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதுவும் கூட புதுச்சேரியில் எந்த துறையிலும் நடந்ததாக தெரியவில்லை.
ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு போன்ற மக்கள் விரோத திட்டங்களால் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு கோடிக்கானவர்கள் வேலையிழந்த அவலம் ஏற்பட்டது. அதில் புதுச்சேரியும் தப்பவில்லை. பல்வேறு தொழில் கூடங்கள் புதுச்சேரி மாநிலத்தில் மூடுவிழா கண்டன.
புதுச்சேரியில் நசிந்து மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள், கூட்டுறவு நிறுவனங்களை மீட்டெடுத்து அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவோம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறியவர்கள் இதற்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் சொன்னார். ஆனால் புதுச்சேரியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிய காரணத்தால் படித்த இளைஞர்கள் எல்லாம் இன்று கஞ்சா விற்பதும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டும் தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அப்துல் கலாமின் கனவு பாஜக–என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் சிதைக்கப்படுவதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *