புதுச்சேரி ரயில்வே நிலையத்தில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் மார்ச் 6-ம் தேதி தெற்கு ரயில்வே கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் தொகுதிக்கு தேவையான ரயில்வே திட்டங்கள், சேவைகள் குறித்து வலியுறுத்த உள்ளனர். இதற்காக புதுச்சேரி ரயில்வே நிலையத்தில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்குப்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கூறுகையில்,
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், வளர்ச்சிப்பணிகள், புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் இருந்து மங்களூர், தாதர், டெல்லி, ஹவுரா, புவனேஸ்வர், யஷ்வந்த்பூர், கன்னியாகுமாரி ஆகிய ஊர்களுக்கு ரயில்சேவை உள்ளது. இதனால் புதுச்சேரிக்கு பயணிகள் வருகை ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பயணிகள் வந்து, செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் தரம் உயர்த்தவும், மேலும் பல முக்கிய ஊர்களுக்கு புதுச்சேரியில் இருந்து ரயில் வசதி ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
குறிப்பாக, புதுச்சேரியில் இருந்து ஏனாமிற்கு ரயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரயிலை புதுச்சேரிக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். புதுச்சேரியில் அந்த ரயில் வந்து நிற்பதற்கு கூடுதல் பிளாட்பாரம் தேவை என்றனர். இதனை தெற்கு ரயில்வே கூட்டத்தில் வலியுறுத்த உள்ளேன். அதோடு தற்போது காக்கி நாடா ரயில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வந்து செல்லலாம் என்று புதுச்சேரி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் அந்த நாட்களில் காக்கிநாடா ரயிலை புதுச்சேரிக்கு கொண்டுவரவும் வலியுறுத்துவேன். மேலும் புதுச்சேரியில் ரயில் இன்ஜின் பராமரிக்க தனி லைன் இல்லாததால் புதுச்சேரிக்கு பயனிகளை இறக்கிவிட்டுவிட்டு, பராமரிப்பு பணிக்காக விழுப்புரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த ரயில்கள் செல்வதற்காக கூடுதலாக ஒருமுறை ரயில்வே கேட் போடப்பட்டு, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தப்படுகின்றது. எனவே புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பதற்காக கூடுதல் லைன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துவுள்ளேன்.
இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு நாளில் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும். அதனை கணக்கில் கொண்டு ரூ.72 கோடியில் புதுச்சேரி ரயில் நிலையம் விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியை திட்டமிட்ட காலத்தில் முடிக்கவும் வலியுறுத்துவேன். சென்னையில் இருந்து இசிஆரில் புதுச்சேரி கடலூருக்கு ரயில்வே பாதை அமைப்பதில், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கும், பின்னர் மரக்காணம், புதுச்சேரி, கடலூருக்கும் ரயில்வே பாதை அமைக்கலாம் என்ற ஆலோசனையையும் தெரிவிப்பேன். அதுபோல் புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்கவும் வலியுறுத்துவேன். நடைபெற்று வரும் காரைக்கால் பேரளம் ரயில்வே பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்துவேன். இப்பணிகளை செய்து முடித்தால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், வியாபாரமும் பெருகும். எனவே இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேள்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *