மதுரையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோரிப்பாளையம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். மேலும் ரூ.1,805.28 கோடி செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த தி.மு.க. பாகமுகவர்கள் மாநாடு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்மற்றும் கட்சியினர் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்து வேன் மூலம் மதுரை வடபழஞ்சி நுட்ப பூங்கா சென்றார். தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மைய கட்டிடம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார் பில் மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, அ.வெங்கடேசன், எம். பூமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.