புதுச்சேரியில் மாணவர்களை குறி வைத்து படகு குழாம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் கஞ்சா பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


 இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக விளங்கும் நோணாங்குப்பம் படகு குழாம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிச்சாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.  போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். இதில் போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

காவல் நிலைய விசாரணையில் அவர்கள் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 22), அரவிந்தன் (20) என்பதும், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா சப்ளை செய்ததாக வில்லியனூர் பகுதியை சேர்ந்த நாகபிரபு (21) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 மோட்டார் சைக்கிள், 3 செல்போன், ரூ.1,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *