நாகப்பட்டினம்,ஜூன்.27-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செடிகளில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த வாரம் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. இதில் கொத்தமங்கலம், திட்டச்சேரி, திருமருகல், ஆலத்தூர், சியாத்தமங்கை, கட்டுமாவடி, ஏனங்குடி, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில், பலத்த காற்று அடித்ததில் திருமருகல் ஒன்றியம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பருத்தி பயிரிட்டு முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் சில நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்குதலால் செடிகள் காய்ந்து சேதம் அடைந்துள்ளது.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த பருத்தி செடிகள் தற்பொழுது மர்ம நோய் தாக்குதலால் செடிகள் கருகி காய்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சேதம் அடைந்து பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.