காஞ்சிபுரம், ஜூலை 27:
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அறுவை புற்றுநோயியல் சங்கத்துடன் இணைந்து, தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு “நெடுநாள் நோய்களின் துயர் தணிப்பில் ஏற்படும் கருணைச் சோர்வு (Compassion Fatigue)” என்ற தலைப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான கருத்தரங்கத்தை நடத்தியது.
மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் டாக்டர் எஸ். சரவணன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அறுவை புற்றுநோயியல் துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் சுப்பையா சண்முகம் தலைமை வகித்தார்.
நெடுநாள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களிடம் ஏற்படக்கூடிய கருணைச் சோர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் மனநலம், நலப் பாதுகாப்பு மற்றும் சேவைத்திறனை மேம்படுத்துவதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
கருத்தரங்கில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் எம். மலையப்பன் சிறப்புரையாற்றினார். காஞ்சிபுரம் மனநல மருத்துவர் டாக்டர் மரியா ஆண்டனி மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் உளவியல் துறைத் தலைவர் முனைவர் சுரேந்திரன் வீரையா ஆகியோர் சிறப்பு விரிவுரைகள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, லயோலா கல்லூரியின் முனைவர் டி. கிறிஸ்டியானா தலைமையில், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் உளவியல் துறை மருத்துவர் சதிஷ் மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஆகியோர் சுகாதார வல்லுநர்களுக்கான செயல்முறைப் பயிற்சியை நடத்தினர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும், மூத்த உதவிப் பேராசிரியருமான டாக்டர் டி. பாலமுருகன் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் மருத்துவர் சிவகாமி நன்றி உரையாற்றினார்.