தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கூலித்தொழிலாளியான தந்தை முத்துப்பாண்டி மற்றும் தீப்பெட்டி ஆலையில் பணிபுரியும் தாய் பேச்சியம்மாள் ஆகியோர், மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு பொருளாதார சிரமங்களை மீறி ஆதரவளித்ததாக தெரிவித்தனர். கபடி வீரராக தொடங்கிய ராஜா, ஜிம்மில் பயிற்சி பெற்றபோது பயிற்சியாளர்களின் ஆலோசனையின்பேரில் பளுதூக்குதலுக்கு மாறி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

ராஜாவின் அண்ணன் சுரேஷ்குமார், தம்பியின் தொடர் முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமானது என்றும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே அவரது இலக்கு என்றும் கூறினார்.

முதல் பயிற்சியாளர் சொர்ணமுத்து, ராஜாவின் வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியதுடன், கோவில்பட்டி பகுதியில் ஏராளமான திறமையான பளுதூக்கும் வீரர்கள் இருப்பதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன ஜிம் அமைக்க வேண்டும் என அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *