‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் கீழ் சிறுதாமூர் ஸ்ரீனிவாசா அறக்கட்டளை வழங்கல்
செங்கல்பட்டு:
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்கில், சிறுதாமூர் ஸ்ரீனிவாசா அறக்கட்டளை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைகளுக்கு இதுவரை 1,120 பெஞ்சுகள் மற்றும் எழுதுமேசைகள் வழங்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் பல அரசுப் பள்ளிகளில் போதிய அளவு பெஞ்சுகள் மற்றும் மேசைகள் இல்லாததால், மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரம் தரையில் அமர்ந்து படிப்பது மாணவர்களின் உடல் நலத்திலும், கற்றல் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, மாணவர்களுக்கு முறையான இருக்கை வசதிகளை ஏற்படுத்தி, அவர்களின் உடல் நலத்தையும் கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுதாமூர் ஸ்ரீனிவாசா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் விஜயகிருஷ்ணன், ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறார்.
120 ஆண்டுகளாக தரையில் அமர்ந்து படித்த மாணவர்களுக்கு வசதி
செங்கல்பட்டு மாவட்டம் மொறப்பாக்கம் அரசு பள்ளியில், சுமார் 120 ஆண்டுகளாக மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்று வந்த நிலையில், அப்பள்ளி வகுப்பறைகளுக்கு பெஞ்சுகள் மற்றும் எழுதுமேசைகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் கமலக்கண்ணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர் விஜயகிருஷ்ணனிடமிருந்து மாணவர்களுக்கான இருக்கை வசதிகளைப் பெற்றுக்கொண்டு பள்ளிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் கல்வி அலுவலர் கமலக்கண்ணன், ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் பயன் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், வகுப்பறைகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வம் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மொறப்பாக்கம் பள்ளித் தலைமை ஆசிரியர் கோமதி, சமூக ஆர்வலரும் அமெரிக்கத் தமிழ்க் கவிஞரும் பாடகருமான மேனகா நரேஷ், முனைவர் தாமரைச்செல்வி, சித்திரக்கூடம் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மொறப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி, யுவராஜ், சிறுதாமூர் ரங்கப்பன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நேசம் அறக்கட்டளை சார்பில் பிரேமா வழங்கிய எழுதுபொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்கள், சித்திரக்கூடம் மற்றும் மொறப்பாக்கம் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதோடு, அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலும் பல அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அறக்கட்டளைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.