RAMP திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் துறையைச் சேர்ந்த M SME நிறுவனங்களுக்கு நியூமேடிக்ஸ் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய (DIC) வளாகத்தில், MSME செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் (RAMP) திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் துறையைச் சேர்ந்த MSME தொழில் முனைவோருக்கான “நியூமேடிக்ஸ் பயன்பாடுகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி”19.11.2025 அன்று இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) அகமதாபாத் மற்றும் மாவட்ட தொழில் மையமும் (DIC) இணைந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் RAMP திட்டம், தொழில்நுட்ப மேம்பாடு, செயல்திறன் உயர்வு, திறன் மேம்பாடு மற்றும் செயல்முறை முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் MSME சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நியூமேடிக்ஸ் குறித்த தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்குவது பிளாஸ்டிக் துறையில் செயல்படும் MSME களுக்கு காலத்திற்கேற்ற தேவையாக அமைந்தது.
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து EDII திட்ட மேலாளர் திரு. தினேஷ் பாபு அவர்கள் வரவேற்புரையாற்றினார். பின்னர் EDII பேராசிரியர் திரு. சமித் குமார் அவர்கள் தலைமை விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பாராட்டினார்.
இதன் பின்னர் புதுச்சேரி அரசின் அரசுச் செயலாளர் (தொழில்கள் & வணிகம், தீயணைப்பு சேவை மற்றும் கலால்) திரு. விக்ராந்த் ராஜா, ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் துறையைச் சேர்ந்த MSME நிறுவனங்கள் தங்களது எதிர்கால தொழில்நுட்ப பயிற்சி தேவைகளை அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதுச்சேரியின் தொழில் வளர்ச்சியை முன்னேற்ற துறை தோறும் தனிப்பட்ட பயிற்சி வழங்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், RAMP திட்டத்தின் கீழ் இத்தகைய தொழில்துறை பயிற்சிகளை நடத்திய EDII மற்றும் DIC ஆகியவற்றை அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வுகள் JANATICS INDIA Pvt Ltd நிறுவனத்தின் நிபுணர்களால் நடத்தப்பட்டன. இதில் நியூமேடிக்ஸ் அடிப்படைத் தகவல்கள், நியூமேடிக் கூறுகளின் வகைப்படுத்தல், சிலிண்டர், வால்வு, FRL போன்ற கூறுகளின் செயல்பாடு மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் நியூமேடிக்ஸ் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி திறன், துல்லியம் மற்றும் பாதுகாப்பு எவ்வாறு மேம்படுகிறது என்பதையும் நிபுணர்கள் எடுத்துக் கூறினர்.
பிளாஸ்டிக் உற்பத்தித் துறையைச் சேர்ந்த 54 க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிபுணர்களிடம் தங்களது கேள்விகளை முன்வைத்தனர். பராமரிப்பு முறைகள், இயந்திரத் தடைநீக்கம், தானியக்கம், செயல்திறன் உயர்வு போன்ற தலைப்புகளில் MSME தொழில் முனைவோர் பயனுள்ள விளக்கங்களைப் பெற்றனர்.
இந்த பயிற்சி, தொழில்துறை உபகரணங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் செயல்படுத்துவதற்கான புரிதலை மேம்படுத்தியது.
EDII யின் மூத்த திட்ட அலுவலர் திரு. விக்னேஷ் தனச்செல்வன், அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.