ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வெங்கட்ராமன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது…
புதுச்சேரி மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தொழிற்சாலைகள் வருட கணக்கில் செயல்படும் வரை அரசால் கண்டுபிடிக்க படாமல் இருந்ததற்கு என்ன காரணம். அரசின் சுகாதார செயலர் என்ன செய்கிறார். இவ்வளவு துணிச்சலுடன் புதுவையில் செயல் படும் போலி மருந்து தொழிற்சாலைக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அந்த கருப்பு ஆடு யார் ?.
சட்டமன்றத்திற்கு உள்ளே இருக்கிறாரா அல்லது வெளியில் இருந்து செயல் படுகிறாரா. இது முதல்வருக்கு தெரியாமல் நடந்திருக்க சாத்தியமில்லை.
மருந்து தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் துறை புதுவையில் செயல்படுகிறதா இல்லையா. இதே போல் தரமற்ற மருந்துகள் மற்றும் போலி மருந்துகள் அரசு மருத்துவ மனைகள் மற்றும் மருந்து கடைகளுக்கும் விநியோகம் செய்து பலகோடி ரூபாய் வரை கொள்ளையடித்து இருக்கிறார்கள்.
இதனால் அரசாங்கத்திற்கு வரி இழப்பும் , மக்களுக்கு உயிர் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது . அரசு மருத்துவ மனைகளில் மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி மக்கள் மத்தியில் ஒரு விதமான பீதி ஏற்பட்டுள்ளது.
மக்கள் உயிருக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமி அவர்கள் முழு பொறுப்பேற்று மக்களுக்கு உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் ரங்கசாமி அவர்கள், புதுச்சேரியில் ஊழலற்ற நேர்மையான ஜனநாயக ரீதியான மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றால் , மத்திய அரசுடன் கைகோர்க்கும் இரட்டை என்ஜின் ஆட்சி புதுவையில் அமைய வேண்டும் என்று கூறி தான் வெற்றி பெற்று பா ஜ க உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டது. இதுவரை முதல்வர் ரங்கசாமி செய்த சாதனைகள் என்ன. மக்களின் அடிப்படை பிரச்சனைகளான கல்வி , வேலைவாய்ப்பு , குடி நீர் , ரோடு வசதி, சுகாதாரம் , அனைத்தும் சீர்கெட்டு போய் உள்ளது. முதல்வரின் நிர்வாக திறமையின்மையால் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து புதுவை அரசு அதனை சமாளிக்க முடியால் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது.
இந்த போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இல்லாமல் புதுவையில் இன்னும் எத்தனை போலி மருந்து தொழிற்சாலை செயல்பட்டு கொண்டிருக்கிறது
என்பதை அரசு கண்டுபிடித்து போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த போலி மருந்து தொழிற்சாலை குறித்து முதல்வர் ரங்கசாமி அவர்கள் முழு பொறுப்பேற்று ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் , சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வெங்கட்ராமன் மாநில தலைவர் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்