கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் – 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் சோதனை
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா புதன்கிழமை நள்ளிரவில் குமுளி மலைச்சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டார். இந்தச் சோதனையின்போது குமுளி போலீசாரும் உடனிருந்தனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்கவும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் ஜெகநாத் மிஸ்ரா அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், கம்பம் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, குமுளி மலைச்சாலையில் சென்ற 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் அவர் சோதனை மேற்கொண்டார். இந்தச் சோதனையில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தொடர்பாக எதுவும் கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், “கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குமுளி மலைச்சாலையில் சென்ற லாரிகளில் சோதனை நடத்தினோம். இதில் ரேஷன் அரிசி கடத்தல் எதுவும் கண்டறியப்படவில்லை.
கம்பம் பகுதி கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், குமுளி மலைச்சாலை மற்றும் கம்பம் சுற்றுவட்டாரச் சாலைகளில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பு அவசியமாகும். இனிவரும் காலங்களில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக, வருவாய்த் துறையினர் மற்றும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.
கேரள மாநில எல்லைப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.