கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் கோயில் இனாம் நில விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடி வருவதற்காக தன் மீது பொய் வழக்குப் பதிய ஆளும் கட்சி முயற்சி செய்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் பிரேம்நாத் குற்றச்சாட்டு.பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:
“கரூர் வெண்ணைமலை கோயில் இனாம் நிலப் பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஆதரவு அளித்து போராடி வருகிறேன். இதனால் எனது தொழில் நிறுவனங்களில் அதிகாரிகளை தூண்டிவிட்டு ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சார்ந்த நிறுவனங்களில் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்கின்றனர்.
ஆனால் எந்த ஆவணங்களும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை
உடனடியாக என் மீது ஏதாவது ஒரு பொய் வழக்கு பதிய வேண்டும்,என்னை கைது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை என் மீது மூன்று பொய் வழக்குகள் பதியப்பட்டது. கேட்டால் ‘அமைச்சரின் தூண்டுதலின் பேரில் பதிவு செய்யபட்டது’ என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவர் கூறினாரா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கு மிகவும் நெருக்கமான mcs என்கின்ற மாயனூர் சங்கர் ஆனந்த் என்று அழைக்கப்படும் எம்.சி. சங்கர் என்பவர் மூலம் தான் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சங்கர்ஆனந்த் என்னிடம் வாட்ஸாப்ப் காலில் பேசினார். அப்போது, ‘அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நாங்கள் வழக்கு பதிந்தோம்… நீ எல்லாம் எம்மாத்திரம்!’ என்று பொறுமையில் தகாத வார்த்தைகளை பேசுகிறார் .
மேலும், ‘மணல் திருட சொன்னதாக’ தங்கள் நிறுவன லாரி ஓட்டுநரிடம் வாக்குமூலம் வாங்கி என் மீது பொய்யான புகார் பதிவு செய்தனர். இதுபோன்று இன்னொரு பொய்யான வழக்கை என் மீது மீண்டும் பதிவு செய்ய முயற்சி செய்கின்றனர்,” என குற்றம் சாட்டினார்.
“ஆளும் கட்சியினர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உயர்ந்த மனப்போக்கில் இருக்கிறார்கள். நேற்றைக்கும் அதுதான் நடைபெற்றது. மக்களுக்காக உண்மையாக களத்தில் நின்று போராடினால்… நாங்கள் அரசியல் செய்யவில்லை! அரசியல் பண்ணவும் வரவில்லை. மக்களை போய் சந்தித்தோம். அவர்களுடைய உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய உடமையை காப்பாற்ற வேண்டும், அவர்களை பாதுகாக்க வேண்டும்… அதற்காக அந்த இடத்திற்கு சென்று ஆதரவு கொடுத்தோம்.
அதற்காகவே நான் தொழில் செய்யும் இடத்தில் என் தொழிலை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நடந்து கொள்கிறார்கள்.வரும் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கரூர் வருவதாகவும், பாதிக்கப்பட்ட வெண்ணைமலை மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும், ஒரு தீர்வு கிடைக்கும். அதுவரை இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோன் என தெரிவித்தார்.