தவத்திரு குன்றக்குடி அடிகளார் ! கவிஞர் இரா .இரவி !

“இப்படி ஒரு துறவி வாழ்ந்தார் என்பதை இனி வரும் உலகம் நம்ப மறுக்கும் “அப்படி வாழ்ந்த புனிதர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ! ஒரு துறவி எப்படி ? வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.

துறவி என்பதற்கு பழந்தமிழ்ச்சொல் அடிகளார் என்பது அடிகளார் என்ற சொல்லால் இந்தியா முழுவதும் அல்ல உலகம் முழுவதும் அறியப்பட்ட மாமனிதர் .அடிகளார் என்ற ஒற்றைச் சொல்லிற்கு உலகப் புகழ் தேடித் தந்தவர்.1925 ஆம் ஆண்டு பிறந்து 1995 ஆம் ஆண்டு காலமானார் 70 ஆண்டுகள் வாழ்ந்தவர் .

நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர் அடிகளார் .அப்பா சீனிவாசம் பிள்ளை , அம்மா சொர்ணதம்மாள் சராசரி குடும்பம் .குழந்தைகள் சாப்பிட்ட பின் , இருவர் சாப்பிடும் உணவு உள்ளது. முஸ்லிம் பெரியவர் வந்து அம்மா பசி என்கிறார் .சொர்ணதம்மாள் இருந்த உணவை அவருக்கு அளிக்கிறார் .நல்ல பசி என்பதால் முழுவதையும் உண்கிறார். நல்ல பசியோடு சீனிவாசம் பிள்ளை வருகிறார். முதியவருக்கு உணவு இட்டதை சொல்கிறார். பரவாயில்லை நான் சாப்பிட்டு விட்டேன் என்கிறார் .சீனிவாசம் பிள்ளை.இப்படி பெற்றோரின் நல்ல குணம் பார்த்து வளர்ந்த மகன் பின் நாளில் நல்ல துறவி ஆனார் .நல்ல குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்கள் நடத்தையில் உள்ளது .

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் முன்னாளில் சுதந்திரப் போராட்டத்திலும், பின்னாளில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர் . தமிழ்ப்பற்று மிக்கவர். திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். திருக்குறள் பற்றி பல நூல்கள் எழுதியவர் .கோவிலில் தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்று விரும்பியவர் .

1967 ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் குன்றக்குடி அடிகளார் . 47 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திருக்குறளை தேசிய நூலாக்கவில்லை. இனியாவது நடுவணரசு திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் .அதுதான் அடிகளார் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக் அமையும் .

குன்றக்குடி அடிகளார் இளைஞராக இருந்தபோது நடந்த நிகழ்வு ஒன்று. ஊரில் இருந்த பிள்ளையார் கோவிலில் துர்நாற்றம் வருவது கண்டு யாரும் கோவிலுக்குள் செல்லவில்லை. பூசைகள் நின்று விட்டன .விசவாயு தாக்கி உயிர் பலி என்று இன்றும் செய்திகள் படிக்கிறோம் .ஆனால் தன் உயிரை துச்சமென நினைத்து நண்பன் ஒருவனுடன் கோவிலின் உள்ளே சென்றார் .கருவறை அருகில் நாய் செத்துக் கிடந்தது. கயிறு கட்டி நாயை அப்புறப்படுத்தி விட்டு, கோவிலை கழுவி விட்டு சுத்தம் செய்து .வாசனைப்புகைப் போட்டார். பின் எல்லோரும் சென்று வழிபட்டனர் .
.
குன்றக்குடி அடிகளார் உழைப்பால் , தொண்டால், திறமையால்,மனித நேயத்தால் உயர்ந்தவர் ஆதின மடத்தில் கணக்கராக பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர் .1945 ல் தீட்சை பெற்றார் .பின் கல்லூரி சென்று தமிழ் இலக்கியங்கள் பயின்றார் .தமிழ் அறிஞர் தண்டபாணி தேசிகரிடம் தமிழ் கற்றார்.1949 இல் மடத்திற்கு இளவரசனார் .1952 ஜூன் மாதம் 16 ஆம் நாள் குன்றக்குடியின் 45 வது குருமகா சன்னிதானமாக பொறுப்பு ஏற்றார் .

குன்றக்குடி அடிகளார் பொறுப்பு ஏற்றவுடன் முதல் செயலாக ஆதினங்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கும் முறையை ஒழித்தார். மனிதநேயம் மிக்கவர் . மனிதனை மனிதன் சுமத்தல் கூடாது என்றார்.
சாதி மதம் கடந்து அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அடிகளாரின் மனிதநேயப்பணி கண்டு பிரதமர் நேரு அவர்கள் சமூக நல வாரியத்தில் உறுப்பினராக்கினார் .

துறவிகள் கடல் கடந்து வெளிநாடு செல்லக் கூடாது என்ற கருத்தை ஒதுக்கி விட்டு வெளிநாடு ரசியா சென்றார் .அங்கு உழைப்பின் மேன்மை உணர்ந்து .குன்றக்குடி கிராமத்தில் திட்டமிட்டு உழைப்பின் மேன்மையை உணர்த்தினார். தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறியது குன்றக்குடி. பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் குன்றக்குடிக்கு அனுப்பினார். அடிகளாரின் உழைக்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றார் .

குன்றக்குடி அடிகளார் மலேசியா சென்றார்கள் அங்குள்ள பல்கலைக் கழகத்திற்கு பெரிய நூலகம் அமைக்க வேண்டும் என்று சொன்னதும் முதல் ஆளாக மடத்து நிதியில் இருந்து நன்கொடை வழங்கி, நன்கொடை பெறும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.அந்த நூலகம் இன்றும் குன்றக்குடி அடிகளார் புகழ் பாடும் விதமாக உள்ளது .

இலங்கை யாழ்பாணம் சென்றார் .அங்கு உள்ள சைவக்கோவில்களில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் அனுமதிப்பதில்லை என்ற தகவல் கேட்டவுடன் .கோவில் வாசலில் உண்ணாநோன்பு தொடங்கினார். செய்தி அறிந்து கோவில் நிர்வாகத்தினர் வந்து பேசி அனைவரையும் ஆலயத்தில் அனுமதிப்பதாக உறுதி தந்ததும் ,அனைவருடன் சென்று வழிபட்டார் .

அடிகளார் அவர்கள் சாதியோ , மதமோ, மொழியோ ஆதிக்கம் செய்தால் அதனை எதிர்த்தவர் .ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவர் .மற்றபடி அவர் யாருக்கும் எதிரானவர் அல்ல .மனிதநேயம் ,ஒற்றுமை வேண்டும் அதுதான் உண்மையான ஆன்மீகம் என்றவர். புட்டுத்திருவிழாவை உழைப்புத் திருவிழா என்று ஆக்கியவர் .

குன்றக்குடி அடிகளார் மயிலாடுதுறையில் நடந்த மகேசுவரன் பூசைக்கு சைவத்தொண்டர்களுடன் சென்று இருந்தார் .அவரை வரவேற்று அவருக்கு சாப்பிட இலை போட்டனர் .உடன் வந்த சைவத்தொண்டர்கள் எங்கே ? என்று கேட்டார் .அவர்களை இங்கே அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு தனி இடத்தில சாப்பாடு என்றவுடன் , சாப்பிடாமல் எழுந்து வந்த மனிதநேயர்.

குன்றக்குடி அடிகளார் பட்டிமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர். பட்டிமன்றம் பற்றி நூல் எழுதியவர் .மதுரை நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் ,மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில் விழாக்களில் விடிய விடிய பட்டிமன்றம் நடத்திவர் .நான் சிறுவனாக இருந்தபோது சென்று கேட்டு இருக்கிறேன் .தலைவர் தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன்அவர்களும் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களும் குன்றக்குடி அடிகளார்அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் பேசி இருக்கிறார்கள் .பட்டிமன்றத்திற்கு வரவேற்பை பெற்றுத் தந்தவர் அடிகளார்.

குன்றக்குடி அடிகளார் பேச்சு மட்டுமல்ல எழுத்திலும் முத்திரை பதித்தவர். மணிவாசகர் பதிப்பகத்தில் அடிகளாரின் இலக்கிய நூல்கள் 5000 பக்கங்களில் 16 தொகுதிகள் வந்துள்ளன . தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் தொடங்கி தமிழ் அறிஞர்கள் தமிழண்ணல் ,இளங்குமரனார் வரை அணிந்துரை நல்கி உள்ளனர் .இன்றும் விற்பனைக்கு உள்ளன வாங்கி படித்துப் பாருங்கள் .

அடிகளார் சாதி பற்றி நினைக்காதே ,பேசாதே அறிவுறுத்தியவர். இராமநாதபுரத்தில் சாதிக்கலவரம் என்று அறிந்தவுடன் உடன் சென்று அமைதியை நிலை நாட்டியவர். மண்டைக்காட்டில் மதக்கலவரம் என்று அறிந்தவுடன் மண்டைக்காடு சென்று கிறித்தவ மத போதகர்கள், அருட்தந்தை அனைவரையும் சந்தித்தார் .144 தடை உத்தரவு இருந்தபோது மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பிரச்சனைக்குரிய கடக்கரைக்கு சென்று நீராடி தலையில் நீர் சுமந்து வந்து மண்டைக்காடு கோவிலில் அபிசேகம் செய்தார்கள் .அன்பை போதித்தார்கள் .அமைதி நிலவியது. அமைதியை நிலைநாட்டியதற்கு குன்றக்குடி அடிகளார் அவர்களை தமிழக முதல்வராக இருந்த எம் .ஜி ஆர் அவர்கள் சட்டமன்றத்தில் பாராட்டினார்.
அடிகளார் மானுடம் மேன்மையுற உழைத்தவர் .சாதி மத சண்டைகள் வெறுத்தவர் .பிறரிடம் அன்பு செலுத்த வேண்டியவர் .குன்றக்குடி அடிகளார் என்றால் மனிதநேயம் . மனிதநேயம் என்றால் குன்றக்குடி அடிகளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *