புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கார், பஸ், வேன் என பல்வேறு வாகனங்களில் வரும் அவர்கள்
ஒயிட் டவுன் பகுதியில் (செஞ்சி சாலை-பட்டேல் சாலை-கடற்கரை சாலை- சுப்பையா சாலைக்கு இடப்பட்ட பகுதி) அவர்கள் ஒட்டுமொத்தமாக கூடுகின்றனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதி திக்குமுக்காடி வருகிறது. வாகனங்கள் நகர முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இந்த நிலையை மாற்றுவது தொடர்பாக போக்குவரத்து போலீசாருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது நெரிசலை தவிர்க்க சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் நேற்று அவர் பழைய துறைமுக வளாகத்தை பார்வையிட்டார். வாகனங்கள் உள்ளே வருவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு தீயணைப்பு நிலையம் அருகே புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் 4 சக்கர வாகனங்களை பழைய துறைமுக வளாகத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *