பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து நிறைந்தது மனம் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும், பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள், முகாம்களின் போதும் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போதும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கடந்த 27.10.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆலத்தூர் வட்டம் பாடலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் 10 வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் இருட்டில் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், எங்களது குழந்தைகள் மின் விளக்கு இல்லாமல் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என்றும், அடிப்படை தேவைகளுக்கு மின்சாரம் இல்லாமல் இருளில் வசித்து வருகின்றோம் எனவும், எங்களுக்கு மின் இணைப்பு வசதி செய்து கொடுக்குமாறும் தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்திருந்தனர்.
அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மனுவின் உண்மை தன்மையை விரைந்து விசாரிக்குமாறு வட்டாட்சியர் மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியரின் உத்தரவையடுத்து ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையில் மின்சாரத்துறை அலுவலர்கள் என அந்தப் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் ஊத்தங்கால் பகுதியில் மனுகொடுத்த மக்கள் வசிக்கும் இடத்தில் மின் இணைப்பு இல்லை என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவிக்க, அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க ஆவண செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அப்போது மின்சாரத்துறை அலுவலர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்காக இணையதளம் வாயிலாக புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து கொடுத்து, வீட்டிற்கு உரிய ஒயரிங் வசதிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி விரைந்து நடவடிக்கை எடுத்து, 19.12.2025 அன்று 10 குடும்பங்களுக்கும் மின் தடையின்மை சான்று வழங்கி, மின்னிணைப்பு வழங்க வழிவகை செய்துள்ளார்கள்.
பத்து வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் இருட்டில் வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆட்சியரின் உத்தரவால் உடனடியாக மின் இணைப்பு வழங்க வழிவகை செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள், மக்களின் நிலை உணர்ந்து கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ள. தங்கள் மனுவின் மீது துரித நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மின் இணைப்பு பெற்ற பயனாளி அமுதா என்பவர் தெரிவித்ததாவது:
நான் ஆலத்தூர் வட்டம் பாடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்தங்கால் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத எங்களது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி
கடந்த 27.10.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்து இருந்தேன். என்னுடைய மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் கூறினார்கள்.
உரிய நடவடிக்கை எடுப்போம் என சொன்னதோடு மட்டும் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து, எனது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளார்கள். இப்போது எங்களது குடும்பத்துடன் நாங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளோம். எங்களது வீட்டிற்கு மின்னிணைப்பு பெற வழிவகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்தார்.