காங்கிரஸ் கட்சியின் கையோடு கைகோர்ப்போம் கலந்தாய்வுக் கூட்டம் சூரமங்கலம் கூட்ரோடு மனோரஞ்சிதம் அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மைநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ. வி. சுப்பிரமணியம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு அடக்குமுறை இருந்ததோ அதேபோல இப்பொழுது மத்தியில் ஆளும் பாஜக அரசு அடக்கு முறையை கையாண்டு வருகிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மந்திரிகள் அனைவரையும் ரெய்டு என்ற முறையில் மிரட்டிவருகிறது. இதன் அடிப்படையில்தான் நம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏழு, எட்டு, எட்டப்பன்கள் பாஜக சென்றுவிட்டனர். ஆனால் வருமான வரித்துறையினர் என்னிடமோ அல்லது அனந்தராமனிடமோ எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

நாங்கள் நேர்மையான முறையில் சரிவர கணக்குகள் வைத்துள்ளதால் அவர்களால் எங்களை மிரட்டமுடியாத நிலை உள்ளது. இருந்தும் ஆளும் கட்சியில் உள்ள ஜான்குமாரையே வருமானவரித்துறையினர் மூலம் மிரட்டி பாஜக செக் வைத்து காயை நகர்த்துகிறது. பிஜேபியேச் சார்ந்தவர்களே அக்கட்சியால் மிரட்டப்படுகின்றனர். மேலும் எதிர் கட்சிஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி குறுக்கு வழியில் பாஜக ஆட்சிக்கு வர துடிக்கிறது.
இங்கு புதுவையை ஆளும் முதல்வர் ரங்கசாமிதான் புதுவைக்கு பிஜேபியை கொண்டுவந்தார். அவரே இப்போது தனக்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார். அரசுக்கு வருமானம் இல்லையென்று சொல்லி ஒவ்வோர் ஊரிலும் அதிக அளவில் மதுக்கடைகளை திறக்கிறார். நெட்டப்பாக்கம் தொகுதிக்கு எதுவும் செய்யாத இவர் ஓட்டல்களிலும் ரெஸ்டோபார் நடத்த அனுமதி கொடுத்துவருகிறார். அமைச்சர் நமச்சிவாயம் மின்துறையை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவேண்டும் என்றுசொல்லி அதானி கையில் மின்துறை சென்றுவிட்டது. அந்த அதானி 71000 கோடி நம் இந்தியப்பணத்தை ஏப்பம் விட்டவராவார்.மக்கள் சிந்திக்க வேண்டும் புதுவையில் எதிர்கட்சியாக இருக்கும் திமுக இது குறித்து எதுவும் பேசவில்லை. மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நமது இளம் தலைவர், ராகுல் காந்தி 3465 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். ராகுல் காந்தி வழிகாட்டிய இந்த நடைபயணம் புதுவையிலே இந்த நெட்டப்பாக்கம் தொகுதியில் தான் முதன்முதலாக நடத்தப்பட்டது . புதுவை முழுவதும் மக்களை சந்தித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் விரோத பாஜக அரசை அப்புறப்படுத்துவதே நமது தலையாய கடமை என்றுணர்ந்து நாம் செயல்பட வேண்டும் .இவ்வாறு எம்.பி.வைத்திலிங்கம் பேசினார்.

இதனைத் தொடர்ந்து காங். கட்சித்தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், கதிர்காமம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வநாதன். நெட்டப்பாக்கம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மைநாதன், முன்னாள் எம்எல்ஏ விஜயவேணி, மாநில செயலாளர் முத்துக்குமாரசாமி, நெட்டப்பாக்கம் காங்.நிர்வாகி ராமச்சந்திரன், மகளிர் அணி குணசுந்தரி, ஆகியோர் நோக்கவுரை ஆற்றினர். இறுதியாக மாவட்ட செயலாளர் சசிகுமார் நன்றியுறையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெட்டப்பாக்கம் தொகுதி அனைத்துப்பிரிவு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், 200- க்கும் அதிமானோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *