பெரம்பலூர் பாலக்கரை அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள திடலில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருவிழாவாக திகழும் தைத்திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் சென்னையில் ”சென்னை சங்கமம், நம்ம ஊருதிருவிழா” நடத்தப்படுவது போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் 14.01.2026 அன்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து மலைவாழ் மக்களோடு பொங்கல் விழா வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட, மலையாளப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இவ்விழாவில் முன்னிலை கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பொதுமக்களோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தார்கள்,அதனைத்தொடர்ந்து கரகாட்டம், கும்மியாட்டம், பொய்க்கால் ஆட்டம், மயிலாட்டம் என கிராமிய மணம் கமழும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டு சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதோடு பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடனும் ,உற்சாகத்துடனும் கொண்டாட பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இந்தவிழா வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நினைவூட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள திடலில் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை பொங்கல் விழா மற்றும் கலை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இவ்விழாவில் பரதநாட்டியம், நையாண்டிமேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாலாட்டம், புரவியாட்டம், தெருகூத்து நாடகம் போன்ற பல்வேறு கலை வடிகங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உற்சாகமாக கொண்டாடிட இக்கலைவிழாவிற்கு வருகைதந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழுமாறு தெரிவிக்கப்படுகிறது.