C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றபெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, கடலூர் நகர அரங்கில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குமான நடமாடும் வாக்காளர் செயல்முறை விளக்க வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்ததாவது,
1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக 2011 முதல் தேசிய வாக்காளர் தினம் பின்பற்றப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் நோக்கம் “மக்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாக கருத வேண்டும்” என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே ஆகும்.
சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். தேர்தல் குறித்தும், ஒவ்வொரு வாக்காளரின் முக்கியத்துவம் குறித்தும்,100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
“இந்தியக் குடிமக்களாகிய நாம், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூக தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம்“ என்ற விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்களின் பேச்சு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான கோலப்போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்வர்கள், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
தேர்தல்களை மக்களாகிய நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்தலின் போது மக்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும், வளரும் சமுதாயத்தினரின் வாக்குரிமைகளை நிறைவேற்ற இருக்கும் எளிய வழிமுறைகள் எவை, ஐந்தாண்டு காலம் நம்மை ஆளக்கூடிய அரசியல் ஆளுமையை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது போன்ற பல கேள்விகளுக்கு உரிய பதிலை தேடி செல்வதன் அடையாள தேதியே ஜனவரி 25 (தேசிய வாக்காளர் தினம்) ஆகும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய வாக்கினை எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக முறைப்படி செலுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ப.தீபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா,தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார், கல்லூரி அருட்தந்தை முனைவர் க.சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.