C K RAJAN
Cuddalore District Reporter
948871235
கடலூர்
தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு நகரஅரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நேற்று அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், ஸ்பர்ஷ் தொழுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோய்க்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொண்ணாடை அணிவித்து கௌரவித்ததுடன், அவர்களுக்கான பராமரிப்பு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்ததாவது,
அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளான ஜனவரி 30ஆம் நாள் வருடந்தோறும் தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2017ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 30 முதல் இரு வார நிகழ்வாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் ஸ்பர்ஷ் (SPARSH) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 16 ஆம் நாள் வரை அனுசரிக்கப்படுகிறது. மேலும் LCDC தொழுநோய் கண்டறியும் முகாம் 19.01.2026 முதல் 20.02.2026 வரை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் அனைத்து கல்வி நிலையங்கள், மாவட்ட, வட்ட மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றல், தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல், போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் பிப்ரவரி 16 வரை ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு கூட்டங்கள், தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள், தோல் நோய் சிகிச்சை முகாம்கள் செயல்படுத்தப்படுவதுடன், வாரச் சந்தை கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள்,போன்ற இடங்களில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.
நமது மாவட்டத்தில் ஏப்ரல் 2025 முதல் தற்போதுவரை 63 மருத்துவ பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் தொழுநோய் பரவல் விகிதம் 10,000 மக்கள்தொகையில் ஒருவற்கு உள்ளது. இது மாநிலத்தின் பரவல் விகிதத்திற்கு இணையாகவே உள்ளது. தொழுநோயின் ஆரம்ப அறிகுறி தோலில் காணப்படும் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல், தொழுநோயானது மைக்கோபாக்டீரியம் லெப்ரே (MYCOBACTERIUM LEPRAE),என்னும் கிருமியால் காற்றின் மூலமே பரவுகிறது. தொழுநோயானது கூட்டு மருந்து சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாக்க கூடியது. தொழு நோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. எந்த நிலையிலும் தொழுநோயை குணப்படுத்த முடியும், ஆரம்ப நிலை சிகிச்சை ஊனம் வராமல் தடுக்கும். நமது மாவட்டத்தினை தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (தொழுநோய்) மரு.சித்திரைச் செல்வி,இணை இயக்குனர், நலப்பணிகள் (பொ.) மரு.கவிதா, துணை இயக்குனர், காசநோய் மரு.கருணாகரன்,கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.சிந்துஜா, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.