தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) சி.மதன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர காவல் துறையின் மேற்கு பகுதி துணை ஆணையராக பணியாற்றி வந்த சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் 35வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். காவல் துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.மதன் கூறுகையில்,
“தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்துவதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். காவல் துறை அரசியல் சார்பற்ற (Political Neutral) அணுகுமுறையுடன் செயல்படும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் (Organised Crime), ரவுடிசம் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

மேலும், கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் கடல் வழி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சாலை விபத்துகளை குறைப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். “சாலை பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு. ஹெல்மெட், சீட் பெல்ட் உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


ஜாதி அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பாக காவல் துறைக்கு தனிப்பட்ட கண்காணிப்பு குழு செயல்பட்டு வருவதாகவும், அவை ஏற்படாமல் தடுக்கும் வகையில் புதிய யுக்திகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சி.மதன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் அமைதியும் பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *