தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, ரூ.1.53கோடி மதிப்பீட்டில் மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் நடைபெறும் மறுசீரமைக்கும் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.