கம்பம் எம்.எல்.ஏ.வுக்கு கிராம மக்கள் பாராட்டு
உத்தமபாளையம், ஜூலை 4–
உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில், கிராம மக்களுக்குச் சொந்தமான சாஸ்தா கோவிலில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கோவில் இடத்தின் ஒரு பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்ததாகவும், இதனால் கிராம மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னமனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோவில் இடத்தை மீட்டுத் தருமாறு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல். ஜெகநாத் மிஸ்ரா விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைதொடர்ந்து, எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கோவில் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், முறையாக சர்வே செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சர்வே பணியை மேற்கொண்டனர்.அதன் அடிப்படையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் இடம் மீட்கப்பட்டது.இந்த நிலையில், நேற்று சாஸ்தா கோவிலில் கிராம மக்கள் திரண்டு மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தி கூல் காட்சி சாமி வழிபாடு செய்தனர்
தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோவில் இடத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுத்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல். ஜெகநாத் மிஸ்ராவுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர்.