திருவாரூர், ஜூலை 16:
திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள் இன்று திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில், திருவாரூர் பெண்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அவர், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு, பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, திருவாரூர் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் பணிநிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் குளோரின் அளவு மற்றும் தரத்தையும் அதிகாரிகளிடம் ஆய்வு செய்து, தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், திருவாரூர் தென்றல் நகரில் அமைந்துள்ள மாணவியர்களுக்கான சமூக விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், குடிநீர் வசதி, கழிப்பிட பராமரிப்பு, உணவின் தரம் மற்றும் மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு, தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி அதிகாரிகள், ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.