தேனி, ஜூலை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டடத்தை, தமிழக முதல்வர் விஜய் சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய மருத்துவக் கட்டடத்தை பார்வையிட்டார்.
பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவப் பரிசோதனை மையம், வெளிநோயாளர் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவையின் தரம், வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வரதராஜன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் தண்டபாணி, பூதிப்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு பால்பாண்டியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ், அய்யனார், முருகன், இளநிலை உதவியாளர் பா. வினோத், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.