தூத்துக்குடி, ஜூலை 29:
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) மரணத்திற்கு நீதி கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருணாச்சலம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முன்பு காவல்துறையினர் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் கூறியதாக வெளியாகியுள்ள வாக்குமூல வீடியோ இந்தச் சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்புக்குக் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அருணாச்சலம் மரணத்திற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக செயல்பட்டதாக கூறப்படும் உயர் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், தாளமுத்துநகர் காவல் நிலைய தலைமைக் காவலர் மீனாட்சி சுந்தரம், அருணாச்சலத்தை பிடித்து தாக்கிய பின்னர் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யாவிடம் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அர்ச்சுனன், மாநகர் செயலாளர் எம்.எஸ். முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். அப்பாதுரை, தா. ராஜா, சண்முகராஜ், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் கே. சங்கரன், ஸ்ரீவைகுண்டம் நம்பிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, அருணாச்சலம் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.