தேனி, ஜூலை 28:

தேனி கம்மவார் சங்கக் கல்லூரியில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா, தேனி மற்றும் தேனி கம்மவார் சங்க கல்வி நிறுவனங்கள் இணைந்து, ‘விக்சித் பாரத்’ நோக்கில் ‘போதைப்பொருள் இல்லா இளைஞர் இந்தியா’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் தலைமை வகித்தார். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தடகளம், கவிதை, பேச்சு, ஓவியம், மைம்ஸ் நாடகம், பாடல், முழக்கத் தொடர் எழுதுதல் மற்றும் குறும்படம் இயக்குதல் உள்ளிட்ட எட்டு வகையான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் குறும்படம் திரையிடப்பட்டது. இளம் வயதில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் கல்வி, குடும்பம் மற்றும் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கும் பாதிப்புகள், பணத்திற்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக மாறும் நிலை, திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கை சீரழிவது உள்ளிட்ட பல்வேறு சமூகச் சிக்கல்களை குறும்படம் உருக்கமாக எடுத்துரைத்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று, போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

நிகழ்ச்சியில் மை பாரத் கேந்திரா துணை இயக்குநர் பிரவின் குமார், கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *