வெளிநாடு சென்று கடனை அடைக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றதாக புகார்; சிங்கப்பூர் சென்றவருக்கு போலி விசா எனக்கூறி சிறை; நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையிடம் முறையீடு
மன்னார்குடி, ஆக.19:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி விசா வழங்கி ரூ.6 லட்சத்துக்கும் மேல் பணம் பெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் 4 மாதங்களுக்கும் மேலாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மன்னார்குடியை அடுத்த பைங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலி வேலை செய்து வரும் இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். சொந்தமாக வீடு கட்டியதற்காக கடன் பெற்றிருந்த சங்கர், அந்தக் கடனை அடைப்பதற்காக வெளிநாடு சென்று வேலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சங்கரின் உறவினரும், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான ஜெயக்குமார் என்பவர், சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஆசைவார்த்தை தெரிவித்ததாக சங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தன்னுடைய நண்பரான கூத்தாநல்லூர் அருகே மரக்கடை பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அரவிந்தனிடம் இது தொடர்பாக பேசி பணம் கொடுத்தால் சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பி வைப்பார் என ஜெயக்குமார் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய சங்கர், கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரவிந்தனை சந்தித்து வெளிநாடு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் பணம் வழங்கியதாக சங்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் ஐயங்கார் பேக்கரியில் ரூ.50 ஆயிரம், ஸ்ரீநிவாசா நகை அடகு கடையில் ரூ.1 லட்சம், அரவிந்தனின் மனைவியிடம் ரூ.1 லட்சம், மன்னார்குடி பேருந்து நிலையத்தில் அரவிந்தனின் நண்பர்களிடம் ரூ.80 ஆயிரம் என பணம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பாஸ்போர்ட் வாங்குவதற்காக ரூ.50 ஆயிரம் வழங்கியதாகவும், அதன் பின்னர் டிசம்பர் 11-ம் தேதி முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிக் கணக்குகளின் ஜி-பே மூலம் பல்வேறு தவணைகளில் பணம் அனுப்பியதாகவும் சங்கர் கூறியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு தவணைகளில் 2026 ஜனவரி மாதம் வரை பணம் செலுத்தியதாகவும், மொத்தமாக ரூ.6 லட்சத்துக்கும் மேல் பணம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி பணத்தை ஏற்பாடு செய்ததாகவும் சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெளிநாடு செல்வது குறித்து யாரிடமும் கூறக்கூடாது”
சிங்கப்பூர் செல்லும் விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும், விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் வேலை என்றும், மாதம் 1,300 டாலர் சம்பளம் கிடைக்கும் என்றும் ஜெயக்குமாரும் அரவிந்தனும் தெரிவித்ததாக சங்கர் கூறியுள்ளார்.
முதல் முறையாக வெளிநாடு செல்லும் ஆர்வத்தில் இருந்த சங்கரும் அவரது மனைவி தேன்மொழியும் இதனை உண்மை என நம்பி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூட வெளிநாடு செல்வது குறித்து தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, டிசம்பர் 3-ம் தேதி அச்சிடப்பட்டதாக கூறப்படும் சிங்கப்பூர் விசா ஒன்றை சங்கரிடம் வழங்கிய அரவிந்தன், ஜனவரி மாதத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வருமாறு கூறியதாகவும், அங்கு விமான டிக்கெட்டும் வழங்கியதாகவும் சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வது இதுவே முதல் முறை என்பதால், விசாவில் இடம்பெற்றிருந்த விவரங்களை முழுமையாக சரிபார்க்காமல் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறியதாக அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சென்றதும் அதிர்ச்சி
சிங்கப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த சங்கரின் விசாவை அங்கிருந்த அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பளம் உள்ளிட்ட விவரங்களில் சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா போலியானது எனக் கூறி சிங்கப்பூர் அதிகாரிகள் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், பின்னர் அவரது மனைவி தேன்மொழி சிங்கப்பூர் காவல்துறையினரிடம் கண்ணீர் மல்க முறையிட்டு தனது கணவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியதாகவும் சங்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர் சங்கர் இந்தியாவிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை திருப்பிக் கேட்டபோது தொடர்பை துண்டித்ததாக குற்றச்சாட்டு
இந்தியாவிற்கு திரும்பிய சங்கர், அரவிந்தனை சந்தித்து தான் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரவிந்தன் தன்னை சந்திக்காமல் தவிர்த்ததுடன், பின்னர் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்காமல் தனது எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தடுத்ததாக சங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடு சென்று சம்பாதித்து கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கையில் பலரிடம் கடன் வாங்கிய சங்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையில் புகார் — 4 மாதங்களாக நடவடிக்கை இல்லை என வேதனை
இதையடுத்து சங்கரின் உறவினர்கள் அவரை அழைத்துக்கொண்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
அதில், தங்களிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும், போலி விசா மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி தங்களை ஏமாற்றியதாக கூறப்படும் அரவிந்தன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புகார் அளித்து 4 மாதங்களுக்கும் மேலாகியும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் ஒருபுறம் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி, மறுபுறம் குடும்பத்தின் வாழ்வாதார பாதிப்பு என கடும் மன உளைச்சலில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் கருணைக்கொலை செய்யுங்கள்”
தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட சங்கரும் அவரது குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், கடன் சுமையால் தாங்கள் குடும்பத்துடன் வாழ முடியாத சூழ்நிலையில் இருப்பதால் தங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று அரவிந்தனிடம் பலர் வெளிநாடு செல்வதற்காக பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் தகவல்கள் இருப்பதாக சங்கர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சங்கர் செலுத்தியதாக கூறப்படும் பணத்தின் மூலம் ஜெயக்குமார் வெளிநாடு சென்றதாகவும் சங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரவிந்தன் மற்றும் ஜெயக்குமார் தரப்பின் விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .