224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தோல்வியால் பா.ஜனதாவுக்கு தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை அக்கட்சி இழந்துள்ளது. மேலும் தென்இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நி்லையில், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கருத்து தெரிவிக்கையில், “கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது. வகுப்புவாத அரசியலை பிற மாநிலங்களும் இனி நிராகரித்து விடும். வளர்ச்சிக்கும், வளத்துக்கும் மக்கள் வாக்கு அளிப்பார்கள். ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி அல்லது பிற காங்கிரஸ் தலைவர்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுற்றி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் வாக்கு அளித்துள்ளனர். இது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் அடுத்த அண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது. தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ள வாக்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது ” என்று கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *