ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் சர்வதேச மகளிர் ஆண்டை முன்னிட்டு கரியாகுடல் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சர்வதேச பெண் விவசாயிகள் தினம் நிகழ்ச்சி வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தலைமையில் நடைபெற்றது.
மேலும் கூட்டத்தில் அவர் பேசுகையில் விவசாயத்தில் பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பெண்கள் அனைவரும் விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வேளாண்மைத்துறை மூலம் கிடைக்க பெறும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் விளைச்சலை மும்மடங்கு உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் மண் பரிசோதனை முறை, பசுந்தாள் உரங்கள் பயன்பாடு, பயிர் சுழற்சி முறை, வரப்பு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் கடைபிடித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டான் பாஸ்கோ வேளாண்மை கல்லூரி முதல்வர் புவிலா கலந்து கொண்டு இயற்கை விவசாயம் குறித்த தொழில்நுட்பங்களை விரிவாக எடுத்து கூறி பெண் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வேளாண்மையில் சாதனை படைக்க வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் நிர்மலா தேவி ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்று பேசினார். தோட்டக்கலைத்துறை சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுமித்ரா கலந்து கொண்டு காய்கறி சாகுபடிகள் குறித்து பேசினார். வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்த இலக்கியா பெண் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி அளித்தார். மேலும் தான் சிறுதானியங்களில் பல்வேறு லட்டு வகைகள் ,முருங்கை கீரை பொடி, வல்லாரை பொடி என பலதரப்பட்ட வேளாண் விளைப் பொருட்களை வைத்து மதிப்பு கூட்டி ராணீஸ் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் என்ற பெயரில் தான் பல பேருக்கு ஆர்டரின் பெயரில் வெற்றிகரமாக சுய தொழில் செய்து வருவதாகவும் பயிற்சி தேவைப்படும் பெண் விவசாயிகள் தன்னை அணுகினால் பயிற்சி அளிப்பதாகவும் உறுதியளித்தார். பள்ளூர் கிராமத்தைச் சார்ந்த தலித் பெண்கள் கூட்டு விவசாய பண்ணை குழு தலைவர் சகிலா கலந்து கொண்டு தாங்கள் 20 பேருக்கு மேலாக தலித் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து மேட்டுப்பாங்கான நிலத்தில் வேளாண் சாகுபடி வெற்றிகரமாக செய்து வருவதாக கூறினார். நிகழ்ச்சியில் நெமிலி வட்டாரத்தில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெறும் டான்பாஸ்கோ கல்லூரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பெண் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினர். நெமிலி வட்டாரத்தை சார்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் முகிலன் ஏற்பாடு செய்திருந்தார்.