புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறிய தாவது:- புதுவை அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி வழங்கி வருகிறது. அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக 146 பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான கோப்பு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் 127 அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாற விண்ணப்பித்துள்ளன. சிபிஎஸ்இ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமலேயே அரசு பள்ளிகள் என்பதால் 78 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். மீதமுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்க கால தாமதம் ஏற்பட்டதால் அனுமதி கிடைக்கவில்லை. அந்த பள்ளிகளுக்கும் அனுமதி கிடைத்துவிடும். சிபிஎஸ்இ பாடத்தி ட்டத்துக்கு மாறினாலும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. பொது தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பள்ளிகளை கண்காணிப்பது, ஆசிரி யர்களை கண்காணிக்க குழு அமைக்க உள்ளோம். சென்டாக் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி சான்றிதழ் பெற மாண வர்கள் அலைக்கழிக்கப்படு வதாக தொடர்ந்து கூறப்படு கிறது. கடந்த காலத்தில் வாங்கிய சாதி சான்றிதழ் எண் இருந்தால்கூட போதும் என தெரி வித்துள்ளோம். ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக கொள்கை வெளியிட்டுள்ளோம். இதற்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அவர்களையும் அழைத்து பேசி முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறக்கும் முன்பே கவுன்சிலிங் நடத்தி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். கூட்டுறவு கல்வியியல் கல்லூரியை கல்வித்துறையுடன் இணைக்க முதல அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் நடைமுறை பிரச்சினைகள் உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதன்பின் கல்லூரி கல்வித் துறைக்கு மாற்றப்படும். தமிழகத்தில் கள்ளச்சாராய வழக்கில் புதுவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக புதுவை போலீசாரும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். கலால்துறையுடன் இணைந்து மாநில எல்லைகளில் சாராய நடமாட்டத்தை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுவையை பொறுத்தவரை கள்ளச்சாராயம் கிடையாது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். மொழி ஆர்வம் உள்ளவர்கள் தமிழை எடுத்துக்கொள்வார்கள். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பாஜக பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு அரசு பரிந்துரைக்கவில்லை. என்.ஐ.ஏ. தானாகவே முன்வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் விசாரணை முடித்து நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *