பட்டாம் பூச்சிகளின் கனவுகள் !

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கலைவாணித் தமிழ்க் கூடம் .சி .எம் .சி .சாலை ,செஞ்சை .காரைக்குடி .விலை ரூபாய் 20.

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு பரிசுகளும் ,விருதுகளும் பெற்றவர் .ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்து வருவதற்கு பாராட்டுக்கள். இவரது ஹைக்கூ கவிதைகளை இதழ்களில் படித்து இருக்கிறேன் .மொத்தமாக முதல் நூலாகக் கண்டதில் மனம் மகிழ்ந்தது .மனம் திறந்த மடலுடன் நூல்களையும் அனுப்பி இருந்தார் .நூலின் தலைப்பே கவித்துமாக உள்ளது.

மூன்று அடி ,இரண்டு காட்சி .ஒரு வியப்பு ,மெல்லத் திறந்து இருக்கும் கதவு ,உணர்வு இலக்கியம் இப்படி ஹைக்கூ கவிதைக்கு பல்வேறு விளக்கம் சொன்னபோதும் ,படிக்கும் வாசகர் .சிந்தையில் எண்ண அலைகளை எழுப்பி வெற்றிபெறுகின்றது .நூலின் முதல் ஹைக்கூ கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .கடவுளின் பெயரால் , மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டிக்கும் விதமாக உள்ளது .

கோவில் வாசல்
இரத்த சுவடுகள்
அன்பே கடவுள் ?

பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு மிக வேகமாகச் .செல்கின்றன போட்டிப் போட்டு மிக வேகமாக ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

முந்தி செல்லும் வாகனங்கள்
முதலில் செல்கிறது
ஓட்டுநர்கள் உயிர் !

நம் நாட்டில் கடவுள் திருவிழாவிற்கும் , கடவுளுக்கும் பஞ்சம் இல்லை .ஆனால் ஏழைகளின் பஞ்சம் தீர்ந்த பாடில்லை .தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வு .அதன் காரணமாக விலைவாசிகள் உயர்வு .ஏழைகளின் வாழ்க்கையே பெரும் போராட்டமாகி வருகின்றது .என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

வைகை ஆற்றில் அழகர்
காவிரி ஆற்றில் ரங்கன்
நட்டாற்றில் மனிதன் !
.
ஹைக்கூ கவிதைகளில் வாசகர் மனதில் படிக்கும்போது காட்சிப்படுத்துதல் ஒரு உத்தி .அதனை சிறப்பாக கையாண்டு உள்ளார் .காட்சிப்படுத்தும் ஹைக்கூ நிறைய இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

கனத்த ஓசையுடன்
வெடித்துச் சிதறும் பட்டாசுகள்
படபடப்பாய் வண்ணத்துப் பூச்சி !

இந்த ஹைக்கூவை படித்து முடித்தவுடன் ,நம்மனகண்ணில் வண்ணத்துப் பூச்சி தோன்றி நமக்கும் படபடப்பு வருகின்றது .

இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாகவே மாறி வருகிறான் .பாசம் ,நேசம் , அன்பு மறந்து வருகிறான் .பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர் .திருமணம் ஆனவுடன் உடனடியாக தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

குழைந்தைகள் மறந்தனர்
யானைச்சவாரி
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள் !

மதுரையில் பிறந்து உலக அளவில் நாட்டியத்தில் சாதனை புரிந்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் உள்பட பல திருநங்கைகள் வாழ்வில் சாதனை நிகழ்த்தி வருவதை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ ஒன்று மிக நன்று .

பிழையாய் பிறப்பு
வளர்பிறையாய் வாழ்வு
சாதிக்கும் திருநங்கைகள் !

‘புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’ என்று அச்சடித்து இருந்தாலும் அதனைப் படித்துவிட்டு புகைக்கும் இளைஞர்கள் இருக்கின்றனர் .அவர்களின் சிந்தனைக்கு ஒரு ஹைக்கூ

இரு விரல்களுக்குக்கிடையே
ஒற்றைக் கால் எமன்
வெண் சுருட்டு !

நம்நாட்டில் பாறைகளை வெட்டி எடுத்து அயல்நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை அடிக்கின்றனர் .ஆற்றில் மணல்களை அள்ளி எடுத்து கடத்திக் கொள்ளை அடிக்கின்றனர் .தடுக்க முடியவில்லை .போட்டிப் போட்டு இயற்கையை அழித்து வருகின்றனர் .பொறுமையின் சின்னம் பூமி என்பார்கள் .அந்த பூமியே பொறுத்தது போதும் என்று பொங்கிய சினம்தான் சுனாமி .இதனை உணராமல் தொடர்ந்து இயற்கையை அழித்து வருகின்றனர் .

நொந்து போனது
நொய்யல் ஆறு
மணல் சுரண்டல் !

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் ஹைக்கூ பற்றி எழுதியுள்ள ஹைக்கூ நன்று .

பெருங்கடலாய் கருத்துக்கள்
சிறுதுளியாய் வரிகள்
ஹைக்கூ !

குழந்தைகளுக்கு இருக்கும் மனிதநேயம் பெரியவர்களுக்கு இருப்பதில்லை என்பதே உண்மை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வழிகாட்டும் குழந்தை
சாலை கடக்கும் பார்வையற்றவர்கள்
மலர்கிறது மனிதநேயம் !

உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவர் பற்றி ஒரு ஹைக்கூ .

வாழ்க்கை பட்டறையில்
புடம் போடும் கொல்லராய்
குறள் கொடுத்த வள்ளுவர் !
.
குடி கெடுக்கும் குடி பற்றி எழுதிய ஹைக்கூ குடிகாரர்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக உள்ளது .

மதி மயக்கும்
மது மயக்கம்
வீணாகும் மனிதர்கள் !

நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் இயற்கையின் மீது பாசம் பற்று நேசம் மிக்கவர்என்பதைப் பறை சாற்றும் விதமாக உள்ள ஹைக்கூ .எள்ளல் சுவையுடன் உள்ளது .

காட்டுப் பாதையில்
மனிதர்கள் நடமாட்டம்
மரங்கள் ஜாக்கிரதை !

வளர்ந்து வரும் படைப்பாளி கவிஞர் ச .கோபிநாத் அவர்களே தொடந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *