கோவை
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
16வது தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு, வாக்கு செலுத்துவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கோவையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த சைக்கிள் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் துவங்கி வைத்தார். தொடர்ந்து, துணை ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து,ஆட்சியர் பவன்குமாரும் சைக்கிள் ஓட்டி பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பேரணியில் பங்கேற்ற சைக்கிள் வீரர்கள்,
“இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் குடிமகன்”,
“எனது இந்தியா, எனது வாக்கு, நான் பாரதம்”
என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நகரம் முழுவதும் உலா வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய இந்த சைக்கிள் பேரணி, காந்தி பார்க், ஜி.சி.டி. கல்லூரி வழியாக காந்திபுரம் 100 அடி சாலை, பந்தய சாலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி, மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை வந்தடைந்தது. சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும் சைக்கிள் வீரருமான விஷ்ணு பேசுகையில்,
“கோவையில் கடந்த இரண்டு தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 58 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இனிவரும் தேர்தலில் இந்த நிலை மாறி, 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. ஜனநாயகத்தில் வாக்கு என்பது மிக முக்கியமான ஆயுதம். முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.