திருபுவனை கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) கடந்த 8 மாத காலமாக கொள்முதல் பஞ்சு விலை ஏற்றம் காரணமாக மேற்கொண்டு தொழிற்சாலையை இயக்க முடியாமல் புதுவை அரசு மூடியது. அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் அறிவித்து இதுவரை சம்பளமும் வழங்காமல் தொழிற்சாலையும் இயக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் இன்று காலை 10 அளவில் ஒன்று திரண்டனர். அவர்கள் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்பின்கோ எதிரில் ஐ. என்.டி. ரூபி, பி.எம்.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் சிவசங்கரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 7 மாதமாக வழங்கப்படாத சம்பள பணம், 7 மாத லேஆப் சம்பள பணம் மற்றும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைகள் வழங்க வேண்டும். மீண்டும் தொழிற்சாலையை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்த திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *