கோவையை அதிரவைத்த ‘வடம்’ ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது.இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம் ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று, உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர் இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்தும் வழிபாடு செய்து ரசிகர்கள் மரியாதை செய்தனர்.

ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் கிடைத்துள்ளதாகக் கூறி ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விமல் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கு வளாகத்திற்குள் காளையுடன் ரசிகர்கள் வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *