தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருச்சேறை, மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி மாலை 7.15 மணி அளவில், வீட்டில் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நடக்கும் போது ரயில் மோதி பலத்த காயம் அடைந்தார். இதை தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் மார்ச் 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக அவரது தங்கை மாலினி மற்றும்அண்ணன் பிரபு மற்றும் மாமா பூமிநாதன் அவர்களுக்கு டாக்டர்கள் எடுத்துரைத்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி, மணிகண்டனின் கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், இரண்டு சிறுநீரகங்களும் திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கும் ,கருவிழிகள் தஞ்சாவூர் அரசு ராஜா மிராஸ்தர் மருத்துவமனைக்கும் , தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகள், தஞ்சை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பின்னர் மணிகண்டன் உடலுக்கு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். பூவதி தலைமையில் அரசு இறுதி மரியாதை செய்தனர்.
இந்த தானத்தின் மூலம் 5 நபர்கள் பயன் பெற்றனர்.