தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி வேட்பு மனு தாக்கல்.
முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுடன் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.
தாராபுரம், திருப்பூர் மாவட்டம்: இந்திராணி திமுக சார்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தாராபுரம் நகரில் இருந்து தொடங்கிய பேரணி, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் ஒழுங்குடன் சென்று தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நான்கு பிரதிநிதிகள் மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான ஃபெலிக்ஸ் ராஜா அவர்களிடம் டாக்டர் இந்திராணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் திமுக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்வலி செல்வராஜ், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், நகர கழகச் செயலாளர் முருகானந்தம், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் கனகராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ்.வி. செந்தில்குமார், கே.கே. துரைசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் டாக்டர் இந்திராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தாராபுரம் 101 (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அவர்கள் உறுதியளித்தனர்.