புதுச்சேரி,
கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் மாநிலத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் டி.வி. நகர் ராஜா, மாநில பொதுச் செயலாளர் சி.வி. செல்வக்குமார், மாநில பொருளாளர் சதீஷ், நகரத் தலைவர் ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அன்பழகன், நகர பொருளாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு தலைவர் பாஸ்கர், பி.ஆர்.டி.சி. தொழிற்சங்கத் தலைவர் ரமேஷ், உப்பளம் தொகுதி தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், கல்வி வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னலமின்றி பாடுபட்ட பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் பணிகள் மற்றும் சமூகச் சேவைகள் நினைவுகூரப்பட்டன. அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய நிர்வாகிகள், காமராஜரின் எளிமை, நேர்மை, மக்கள் நலன் சார்ந்த ஆட்சிமுறை மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது என்று தெரிவித்தனர்.
மேலும், காமராஜர் காட்டிய மக்கள் சேவைப் பாதையை பின்பற்றி, கல்வி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என இயக்க நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் காமராஜரின் புகழை போற்றும் வகையில் முழக்கங்களை எழுப்பி, அவரது நினைவிற்கு மரியாதை செலுத்தினர்.