C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…
கடலூர் மாவட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெலிங்டன் ஏரியினை ரூ.130 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்..
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் திட்டக்குடி வட்டத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் பிரதான கால்வாய்களை ரூ.130 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், நிலத்தடி நீரினை மேம்படுத்திடும் வகையிலும், விவசாய நிலங்களுக்கு போதிய பாசனவசதிகள் கிடைத்திடும் வகையிலும், வேளாண் விளைநிலங்களின் பரப்புகளை அதிகரித்து கூடுதல் மகசூல் கிடைத்திடும் வகையிலும், அனைத்து ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு துணை முதலமைச்சர் 2024ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கினை ஆய்வுமேற்கொள்ள மாவட்டத்திற்கு வருகைபுரிந்த போது,மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால் வசதிகள் மற்றும் ஏரிக்கரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாவட்டத்தில் 21.02.2025 அன்று பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியில் 10 புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி தூர்வாரி புனரமைக்கப்படும் என தெரிவித்தார்.
திட்டக்குடியிலுள்ள வெலிங்டன் ஏரியானது முன்னதாக சிறிய அளவில் பலமுறை தூர்வாரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி முழுமையாக புனரமைத்து தூர்வாரும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் நீர்தேக்க கரையின் நெடுகை 1300மீ முதல் 1700மீ வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் புவியியல் ஆய்வுகள் மற்றும் புவி தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,கரையின் கீழ்புறம் அதற்கு இணையாக கரை அமைக்கப்பட உள்ளது. வெலிங்டன் நீர்தேக்கத்தின் பிரதான கால்வாயினை பலப்படுத்தும் வகையில் கால்வாயின் இருபக்கமும் கான்கிரீட் சுவர் கொண்டு புனரமைக்கப்பட உள்ளது.
நீர்தேக்கத்தின் உபரிநீர் வடிகால் கட்டுமானமானது, நீர்தேக்கம் கட்டப்பட்ட காலத்தில் (1913-23) அமைக்கப்பட்டது. இந்த வடிகால் 114மீ அகலத்திற்கு செங்கற்களால் ஆன கட்டுமான ஆகும். தற்போது, இந்த வடிகால் கட்டுமானமானது மிகவும் சேதமடைந்து வலுவிழுந்துள்ளது. மேலும், உபரி நீர் வடிகாலினை கடந்து சென்று மறுபக்க கரையினை ஆய்வு செய்வதற்கும் மற்றும் வடிகாலினை கடந்து செல்வதற்கும் பாலத்துடன் கூடிய வடிகால் கட்டுமானம் கட்டப்பட உள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 63 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் 24,059 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையான பாசன வசதி கிடைக்கப்பெறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மக்களின் நலன் கருதி சாலைப் பணிகள்,குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் வெங்கடேசன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.