ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனம், தமிழக அரசுடன் (GoTN) தான் கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மையை இன்று மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தியாவில் தமிழகத்தை தனது “முதன்மை மின்வாகன மையமாக” (Flagship EV Hub) மாற்றவும் உறுதியளித்துள்ளது.

தமிழக இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ஒரு பிரத்யேக ‘திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மை’ திட்டத்தையும் தமிழக அரசும் HMIL நிறுவனமும் இணைந்து அறிவித்தன. இத்திட்டம் டிசம்பர் 2027-ல் செயல்படத் துவங்கும்.

இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய HMIL-இன் நிர்வாக இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. தருண் கர்க் அவர்கள், “HMILன் முன்னெடுப்புகள், நிலையான போக்குவரத்து மற்றும் வாகனத் துறையின் மேன்மையில் தமிழகம் வகிக்கும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்திற்குத் தயார் நிலையில் உள்ள பணியாளர்களை உருவாக்கத் தேவையான திறன் மேம்பாட்டுப் பணிகளையும் விரைவுபடுத்தும்.

சென்னை ஆலையில் இருந்து இரண்டு புதிய மாடல்களை வெளியிடுவோம். இதில் இந்த ஆண்டுக்குள் எங்கள் முதல் வெகுஜன சந்தை பிரத்யேக EV உட்பட, இது, மின்வாகனப் பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதிலும், ஒரு வலுவான மின்வாகனச் சூழலமைப்பை (EV Ecosystem) உருவாக்குவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். மின்வாகனங்களின் உள்ளூர்மயமாக்கலை (Localisation) மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால வாகனத் தொழில்நுட்பங்களுக்குத் துணைபுரியும் வகையில், எதிர்காலத்திற்குத் தயாரான திறன்மிகு பணியாளர்களை உருவாக்குவதிலும் நாங்கள் சம கவனம் கொண்டுள்ளோம். ‘தமிழகத்தில் பிறந்து, உலகிற்காகப் தயாரிக்கப்பட்டது’ என்பதற்கு ஒரு உண்மையான சான்றாகத் திகழும் HMIL நிறுவனம், இதுவரை தமிழகத்தில் 3.9 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது, தமிழகம் கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த உற்பத்தித் திறன், இந்தியா ஒரு உலகளாவிய வாகன உற்பத்தி வல்லரசாக உருவெடுக்கும் பயணத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது,” என்று தெரிவித்தார்.

மின்வாகனங்களின் பவர்டிரெய்ன் (Powertrain) அமைப்புகளுக்கான, தமிழகத்தின் முதல் பேட்டரி துணை-அசெம்பிளி ஆலையை HMIL ஏற்கனவே நிறுவியுள்ளது. மேலும், பவர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற முக்கிய உதிரிபாகங்களின் உள்நாட்டு உற்பத்தியை (Localization) தீவிரமாக மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், ஒரு முன்னணி மின்வாகன உற்பத்தி மையமாகத் திகழ வேண்டும் என்ற தமிழக அரசின் லட்சியத்திற்குப் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது.

உத்திமிகு திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மை மூலம் இளைஞர்களுக்கு வலுவூட்டல்

மாநில இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, தமிழக அரசுடனான தனது ஒத்துழைப்பை உத்திகள் ரீதியாக மேம்படுத்துவதாக HMIL அறிவித்தது. திறன்மிகு உற்பத்தி பணியாளர்களின் முன்னணி ஆதாரமாகத் தமிழகத்தை நிலைநிறுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன், மின்சார வாகனங்கள் (EVs), ஹைட்ரஜன் போக்குவரத்து, ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் போன்ற அடுத்த தலைமுறைத் திறன்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், மாநிலத்திற்குள் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது HMILன் நோக்கமாகும்.

தமிழகத்தில் உள்ள ஐடிஐ-கள், பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களுடன் கைகோர்ப்பதன் மூலம், இந்த முயற்சியின் வெற்றிக்காக HMILக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. HMIL மற்றும் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைவு, இளைஞர்களுக்கு மொழித்திறன் உள்ளிட்ட பணியிடத் தகவல் தொடர்புத் திறன்களை அளிப்பதிலும் கவனம் செலுத்தும், இது, வேலைவாய்ப்புக்கான நகர்வை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் திறமையான இளைஞர்கள் என்பதை இந்த முயற்சி அறிந்துள்ளது. மேலும், HMIL தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்தத் திறனாளிகளை பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

உள்நாட்டுமயமாக்கல் மற்றும் விநியோகத் தொடர் சூழலை வலுப்படுத்துதல்

HMIL, EV மற்றும் ICE ஆகிய இரண்டின் உற்பத்தியிலும் உள்ளூர்மயமாக்கலை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மேலும், அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் தற்போதைய 82% உள்நாட்டுமயமாக்கல் அளவை 90% ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சப்ளையர்களிடமிருந்து கொள்முதலை (Purchasing Value) சுமார் ₹4,000 கோடி அளவிற்கு அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. இது, அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் , மாநிலத்தில் சுமார் 2,000 கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் அதே வேளையில், உள்நாட்டு உற்பத்தித் திறன்களை கணிசமாக பலப்படுத்தும்.

HMIL நிறுவனம் அறிவித்த ₹45,000 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக, 2023 முதல் 2032 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ₹26,000 கோடிக்கும் அதிகமான தொடர் முதலீட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துவதில் HMIL நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த முதலீடானது, நீண்டகாலத் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதுடன், புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்தவும், நிலைத்தன்மை சார்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறவும், கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்; இதன் வாயிலாக, உலகளாவிய வாகன மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் தமிழ்நாட்டின் நிலையை இது மேலும் வலுப்படுத்தும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *