“ஜீவா செந்தில் செய்தியாளர் “
குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ். டி. ஈடன் பள்ளியில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டு நேற்று புதன்கிழமை அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழாவின் துவக்க நிகழ்வு இனிதே நடைபெற்றது.
ஓ பி ஆர் நினைவு செவிலியர் கல்லூரியின் முதல்வர் சண்முகவடிவு கலந்து கொண்டு, எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக அதிகாரி தீபக் தாமஸ், பள்ளிதுணைஇயக்குநர் பவித்ராதீபக் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இசைக்கருவிகளின் மாதிரிகள், பசுமைக்குடில், விதைமுளைப்பு மற்றும் வளர்ச்சி, சூரியக்குடும்பம் போன்றவைகளின் மாதிரிகள் நேர்த்தியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. செயற்கை நுண்ணறிவினைப் பற்றி கணினித்துறை மாணவர்கள் சிறப்பான காணொளி மூலம் விளக்கினர்.
மேலும் அன்றாட வாழ்விற்கு உதவும் பல்வேறு சாதனங்களின் மாதிரிகளும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. உயிரியல் துறையின் சார்பில் மனித உறுப்புகளின் செயல் மாதிரிகளும், இரத்தவகைப் பரிசோதனையும் செய்யப்பட்டது.
உணவுத் திருவிழாவில் 6 முதல் 9 வகுப்பு மாணவிகள், வகை, வகையான சத்தான மற்றும் இயற்கைமுறை சிற்றுண்டிகளை, காட்சிப்படுத்தி பரிமாறினார்கள். மாணவ மாணவியரின் உற்சாகமும் பங்கேற்பும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சிறப்பு விருந்தினர், மற்றும் பார்வையாளர்கள், வெகுவாக பாராட்டினார்கள்.